மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ் அடித்துக் கொலை

0
276

நெல்லை : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, திசையன்விளை பகுதிகள் வழியாக நம்பியாறு பாய்கிறது. நம்பியாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. விஜய நாராயணம் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றும் ஜெகதீஷ் 32, நேற்று இரவு பரப்பாடி அருகே பாண்டிச்சேரி கிராமத்தில் நம்பியாற்றில் டிராக்டரில் மணல் அள்ளுவது குறித்து தகவல் அறிந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்திற்கு சென்றார்.

டிராக்டரில் மணல் அள்ளி வந்த கும்பலை மடக்கினார். தப்ப முயன்ற அவர்களுடன் மல்லுக்கட்டி போராடியுள்ளார். அப்போது அந்த கும்பல் இரும்பு ராடால் அவரை தலையில் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி உள்ளது. இருப்பினும் டிராக்டர் சற்று தொலைவில் சிக்கிக் கொண்டதால் விட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். விஜயநாராயணம் போலீசார் இன்று காலையில் தான் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். டிஐஜி கபில் குமார் சரட்கர், எஸ்பி அருண் சக்தி குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

கொள்ளைக்கு போலீஸ் அதிகாரிகள் உடந்தையா? : இதே நம்பியாறு படுகையில் பெருங்குளம் என்னுமிடத்தில் மணல் கொள்ளையை தடுத்து போராடிய சமூக ஆர்வலர் செல்லப்பா என்பவர் கடந்த ஏப்.,25ல் லாரி மோதி இறந்தார். அவரை மணல் கடத்தும் கும்பல் தான் லாரியை ஏற்றி கொலை செய்ததாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். எனவே போலீசார் அந்த கும்பல் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். ஆனால் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. ஒரு வாரத்தில் கொலை வழக்கை, விபத்தில் இறந்த வழக்காக மாற்றம் செய்தனர். இன்றைய சம்பவத்திலும் இரவு 10.30 மணிக்கு மணல் கடத்தல்காரர்கள் குறித்து தனிப்பிரிவு போலீஸ் ஜெகதீஷ் தகவல் தெரிவித்து சென்றும் கூட எந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு செல்லாதது, அப்பகுதி மக்களிடையே போலீசார் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here