லோக்சபா தேர்தலில், 300 தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் அதிரடி திட்டம்

0
330

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், 300 தொகுதிகளில், உறுதியாக வெற்றி பெறும் வகையில், புதிய வியூகத்தை வகுத்து, அதற்கேற்ப செயலாற்ற, காங்கிரஸ் மேலிடம் அதிரடி திட்டம் தீட்டியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலைப் போல், இந்த முறை கோட்டை விட்டு விடக் கூடாது என்பதற்காக, முக்கிய முடிவுகளை எடுக்கும்,’வார் ரூமில்’ ஆலோசனை நடத்த, காங்., மேலிடம் தயாராகி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல், கர்நாடகாவில் பிரசாரத்தை முடித்து, டில்லிக்கு வந்து விட்டார். இதையடுத்து, கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர்களிடையே, திடீர் சுறுசுறுப்பை காண முடிகிறது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் கோட்டை விட்டதைப் போல, மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில், காங்கிரஸ் தலைவர்கள், தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். டில்லி, ரகாப்கஞ்ச் சாலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும், ‘வார் ரூம்’ உள்ளது.

தேர்தல், கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆகியவை குறித்த யுக்தி, வியூகம், கணக்கீடு, மதிப்பீடு ஆகிய விஷயங்களை பற்றி, இந்த அறையில் தான் ஆலோசிக்கப்படும்.கட்சியின் மூத்த, முக்கிய தலைவர்கள் மட்டுமே வந்து செல்லும், இந்த அறையில் நடக்கும் ஆலோசனைகள் அனைத்துமே, மிகுந்த ரகசியம் காக்கப்படும்.

இதனாலேயே, இங்கு நடக்கும் ஆலோசனைகள், கட்சியின் மேல் மட்டத்தில் இருந்து, தொண்டர்கள் வரையில், தீவிர கவனம் பெறுவது வழக்கம். சமீபகாலமாகவே, இந்த ஆலோசனைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கான, யோசனைகளும், வியூகங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ‘நாடு முழுவதும் உள்ள, 543 தொகுதிகளிலும், கவனம் செலுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, வெற்றி பெறுவதற்கு சாதகமான, 300 தொகுதிகளை மட்டும் குறிவைத்து, கவனம் செலுத்தலாம்’ என, திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் பாதி மாநிலங்களில், கூட்டணிக் கட்சிகள் தான் பலமாக உள்ளன. இங்கு, விட்டுக் கொடுக்க வேண்டும்.

 

உ.பி., பீஹார் போன்ற பெரிய மாநிலங்களில், கட்சிக்கு பலம் இல்லாத நிலையில், அங்கு கூட்டணி கட்சிகளை இழுக்கவும், வேட்பாளர்களை நிறுத்தவும், சக்தியையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். மேற்கு வங்கத்தில் மம்தா அல்லது இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்கலாம். ஒடிசாவிலும்அதிக கவனம் செலுத்த வேண்டாம். இதன்மூலம், ஓட்டு கள் பிரியாமல், நவீன் பட்நாயக்கிற்கு போனாலும் பரவாயில்லை; பா.ஜ.,வெற்றி பெற்றுவிடக் கூடாது.

மற்றபடி, பா.ஜ.,வின் நேரடி போட்டி உள்ள மாநிலங்களில் மட்டும் முடிந்தவரையில், திறமை, பலம், நேரம் என அனைத்து சக்திகளையும் முழுவீச்சில் பயன்படுத்தலாம். அந்த வகையில், மொத்தம், 163 தொகுதிகளை உடைய, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்தி, பா.ஜ.,வை திணறடிக்க வேண்டும்.கடந்த தேர்தலில், பா.ஜ., வுக்கு, 100 சதவீத வெற்றியை கொடுத்த மாநிலங்கள் இவை. காங்கிரசால், இங்கு, 10 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

 

இவ்வாறு, பெரும் தோல்வியை பெற்றிருந்தாலும், இம்முறை பா.ஜ., மீது, மக்களுக்கு உள்ள அதிருப்தி, காங்கிரசுக்கு நிச்சயம் சாதகமாக அமையும்,மேலும், டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர கண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், கட்சிக்கு பெரும் கட்டமைப்பு உள்ளதால், வெற்றி வாய்ப்புள்ள, 40 இடங்களில் போட்டியிட்டாலே போதும்

 

சிறிய கட்சிகள் அதிகமாக உள்ள வட கிழக்கு மாநிலங்களில், 25 தொகுதிகளை மட்டும் குறிவைத்து களம் இறங்குவது, நல்ல பலனைத் தரும்.மொத்தம், 76 தொகுதிகளை உடைய, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில், 50 இடங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, மீதமுள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம்.

 

இந்த வியூகங்களின்படி, 260 இடங்களில், காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்த முடியும். மேலும், உ.பி., பீஹார், தமிழகம், மேற்கு வங்கம் என, நான்கு பெரிய மாநிலங்களிலும், மொத்த மாக, கூட்டணி சேர்ந்து, 40 இடங்கள் வரை, போட்டியிடலாம்.

இதன் மூலம், ஒட்டு மொத்தமாக, 300 தொகுதி களை மட்டும் குறிவைத்து, களமிறங்கி, முழு பலத்தை காட்டி, வெற்றியைப் பெறுவது என, ‘வார் ரூம்’ ஆலோசனையில் முடிவு செய்யப்படவுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை, நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. கர்நாடக தேர்தல் முடிவு, அடுத்தாண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, அரசியல் கட்சிகளின் வியூகங்களை மாற்றியமைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, காங்., ஆட்சியில் உள்ள ஒரே பெரிய மாநிலம், கர்நாடகா தான். இங்கு, காங்., தோல்வியடைந்தால், பா.ஜ.,வின், ‘காங்., இல்லாத பாரதம் என்ற கோஷம், மேலும் வலுவடையும்.

கர்நாடகாவில், காங்., ஆட்சியைதக்க வைத்தால், ‘பா.ஜ.,வை எதிர்க்கும் வலிமையான ஒரே கட்சி நாங்கள் தான்’ என, காங்., கூற முடியும். மேலும், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பும், ராகுலுக்கு அதிகரிக்கும்.தென் மாநிலங்களில், பா.ஜ., வலிமையாக உள்ள ஒரே மாநிலம் கர்நாடகா தான். இங்கு, மீண்டும் ஆட்சியை பிடிப்பதன் மூலம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மற்ற தென் மாநிலங்களிலும், கட்சியை வலுப்படுத்த முடியும் என, பா.ஜ., நம்புகிறது.

குஜராத்தில், பெரும் இழுபறிக்கு மத்தியில், பா.ஜ., பெற்ற வெற்றி, ராஜஸ்தான், உபி.,யில் நடந்த இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி ஆகியவற்றால், ‘மோடி மேஜிக் இனி எடுபடாது’ என, எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். கர்நாடகாவில் வெற்றி பெறுவதன் மூலம், இவர்களது வாயை அடைக்க முடியும் என, பா.ஜ.,வினர் கருதுகின்றனர்.அதனால், கர்நாடகா தேர்தல் முடிவு, அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கான வழிகாட்டியாக அமையும் என, எதிர்பார்க்கலாம்.-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here