தி.மு.க., மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஸ்டாலின் தயக்கம்

0
223

புகாருக்கு ஆளாகியுள்ள மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தயக்கம் காட்டி வருகிறார். மாவட்டச் செயலர்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், சில மாவட்டங்களை இரண்டாக பிரித்து, புதிய மாவட்டச் செயலர்களை நியமிக்க, மூத்த நிர்வாகிகளிடம், ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய தி.மு.க.,வில், கட்சியை பலப்படுத்தும் முயற்சியாக, மாவட்ட வாரியாக, கலந்தாய்வு கூட்டங்கள், ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டன.

அக்கூட்டங்களில், மாவட்டச் செயலர்கள், நகர செயலர்கள், ஒன்றிய செயலர்களை பற்றி நேரடியாக புகார் தெரிவித்ததால், ஸ்டாலின் கண்முன் கோஷ்டி மோதல் அரங்கேறியது. அதனால், அடிதடியை தவிர்க்கும் வகையில், கூட்டத்தில், ரகசிய புகார் பெட்டி வைக்கப்பட்டது.

அப்பெட்டியில், புகார் மனுக்களை போட வேண்டும் என்றும், அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஸ்டாலின் தெரிவித்தார். புகார் பெட்டியில் விழுந்த மனுக்கள் மீதான விசாரணையில், பெரும்பான்மையான மாவட்டச் செயலர்கள், ஒன்றிய செயலர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள், உண்மை என நிரூபணமாகி உள்ளது. ஆனால், அறிவித்தபடி, அவர்களின் பதவிகளை பறிக்க, ஸ்டாலின் தயங்குவதாக கூறப்படுகிறது.

அதனால், புகாருக்கு ஆளாகியுள்ள மாவட்டச் செயலர்களை, ‘டம்மி’ ஆக்கும் வகையில், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களை இரண்டாக பிரித்து, புதிய மாவட்டச் செயலர்களை நியமிக்கலாம் என, ஸ்டாலினிடம், மூத்த நிர்வாகிகள், யோசனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில், மாவட்டச் செயலர்களை மாற்றினால், அதிருப்தியில் அவர்கள், நடிகர்கள் ரஜினி, கமல் கட்சிகளுக்கு போக வாய்ப்பு உள்ளது.

மாவட்டச் செயலர்களில் சிலர், ‘மாஜி’ அமைச்சர்களின் வாரிசுகளாக உள்ளனர். அவர்கள் அனைவரும், நடிகர் உதயநிதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இவர்களை தவிர்த்து, மீதியுள்ள மா.செ.,க்களில், கட்சியினரின் புகாருக்கு ஆளானவர்களின் அதிகாரத்தை பறிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து, அந்த தொகுதிகளுக்கு, புதிய மாவட்டச் செயலர்களை நியமிப்பது குறித்து, ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here