தொடர் மறியல் சிறைநிரப்பும் போராட்டம். ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

0
329

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாரூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் 7.5.18 திங்கட்கிழமை கூட்டணியின் திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆ.சுபாஷ்  முன்னிலை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்டச் செயலாளர் ஆர்.ஈவேரா விளக்கி பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைந்து புதிய ஊதியம் நிர்னயம் செய்திட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய முறையினை கைவிட்டு பழைய ஓய்வூதிய முறையினை அமல்படுத்த வேண்டும் என்ற இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அமைப்பின் முடிவின்படி ஜூலை 14 ந்தேதி மாவட்டத் தலைநகர்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், ஜூலை 23 முதல் சென்னையில் தொடர் மறியல் சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவது எனவும் இந்த போராட்ட நிகழ்வுகளில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பாக 2000 ஆசிரியர்கள் பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்பட்டது. அறிவித்துள்ள போராட்டங்களை வெற்றி பெற செய்திடும் வகையில் வட்டார அளவில் ஜூலை 5 தேதியில் ஆயத்த விளக்க கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

புதிய கல்வி திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் இருந்;து தொடக்கக்கல்வித்துறை தனியாக பிரிக்கப்பட்டு அதில் 1.50 லட்சம் ஆசிரியர்களும், அதற்கென தனியே அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரைவான நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட தொடக்கக்கல்வித்துறையினை கலைத்து பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தொடக்கக்கல்வி நலன் பாதிக்கப்படும். எனவே இதுவரை இருந்து வருவதுபோல் தொடக்கக்கல்விதுறையினை தனி இயக்குனரை கொண்டே நிர்வகிக்க வேண்டும் என கூட்டணி கேட்டுக் கொள்கிறது.

குறைவாக மாணவர் எண்ணிக்கையினை கொண்ட தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கப்படும் எனவும், நடுநிலைப்பள்ளிகளில் குறைந்தபட்ச ஆசிரியர் பணியிடங்கள் மேலும் குறைக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இது ஏழை எளிய மக்களின் கல்விக்கு எதிரான செயலாகும். எனவே பள்ளிகளின் எண்ணிக்கையினை குறைத்தும், பள்ளிகளில் குறைந்த அளவில் ஆசிரியர்களை பணிபுரியச் செய்வது என்ற முடிவினை கைவிட்டு பள்ளிகளில் வசதிகளை அதிகரித்து அதன்மூலம் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க செய்திட வேண்டும்.

ஆண்டுதோறும் மே மாதத்தில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஆனால் இதுவரை கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. உடனடியாக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தி வேண்டும். அதே நேரத்தில் கலந்தாய்வுக்கு மாறாக ஆசிரியர் பணிநிரவல் செய்து பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கைகளை நிறுத்திட வேண்டும். என இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஓய்வு பிரிவு அணி மாவட்டச் செயலாளர் நா.மதிவாணன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜூலியஸ், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜோன்ஸ்ஐன்ஸ்டீன், மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாராயணன், ஸ்டாலின், மாவட்ட மகளீரணி செயலாளர் ஜெயந்தி, வட்டாரச் செயலாளர்கள் வேதரத்தினம், பாரதிமோகன், அமிர்தராஜ், சிவகுமார், பாலசுப்ரமணியன், நகர செயலாளர் மார்ட்டின் வச்சிரசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here