திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடந்தது. ஆருரா! தியாகேசா என குரல் எழுப்பி பக்தர்கள் வடம்பிடித்து தேரிழுத்தனர்.

0
288

“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் ஆலயம் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பது ஆகும்.
இக்கோயில் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. திருவாரூர் தேரோட்ட திருவிழாவினை திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் வந்து தங்கி தேரோட்ட ஏற்பாடுகளை பார்ப்பதாகவும் இத்தேரினை இந்திரன் முதலான தேவர்கள் வான்நின்று வணங்கி மகிழ்வதாக அய்தீகம் நிகழ்கிறது.
சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் இன்று (27.5.18) வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. வேத ஆகமங்கள் ஒலிக்க தேரோட்டத்தினை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கொடி அசைக்கப்பட்டவுடன் பக்தர்கள் ஆருரா! தியாகேசா!! என உற்சாக குரல் எழுப்பி வடம்பிடித்து தேரினை இழுத்தனர்.
முன்னதாக 5 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் பக்தர்களால் இழுத்து செல்லப்பட்டது. தியாகராஜர் ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சன்டிகேசுவரர் தேர்களும் பக்தர்களால் இழுக்கப்பட்டது. 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்ற காட்சி பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here