ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராயுடு அதிரடி சதம் சென்னை அணி அசத்தல் வெற்றி

0
329

புனே: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராயுடு அதிரடி சதம் கைகொடுக்க சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடர் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் கரண் சர்மாவுக்குப்பதில் சகார் வாய்ப்பு பெற்றார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதில் தீபக் ஹூடா இடம்பிடித்தார்.

ஐதராபாத் அணிக்கு ஹேல்ஸ் (2) சொதப்பினார். பின், இணைந்த ஷிகர் தவான், கேப்டன் வில்லியம்சன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட தவான் அரை சதம் அடித்தார். வில்லியம்சன் ஐ.பி.எல்., அரங்கில் 10வது அரை சதம் எட்டினார். பிராவோ பந்தில் தவான் (79) அவுட்டானார். வில்லியம்சன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஷர்துல் தாகூர் ‘வேகத்தில்’ மணிஷ் பாண்டே (5) திரும்பினார். முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா (21), சாகிப் (8) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

சென்னை அணிக்கு ராயுடு, வாட்சன் அசத்தல் துவக்கம் தந்தனர். பவுண்டரி சிக்சர்களாக விளாசிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட வாட்சன்(57), தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். ரெய்னா(2) நிலைக்கவில்லை. :

பின் தோனி களமிறங்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. இத்தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வரும் ராயுடு, இப்போட்டியிலும் ஏமாற்றவில்லை. 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் சதம் விளாசிய ராயுடு, இந்த ‘சீசனில்’ வாட்சன் (சென்னை), கெய்ல் (பஞ்சாப்), ரிஷாப்பிற்குப்பின் (டில்லி) சதம் அடித்த 4வது வீரரானார்.

முடிவில், சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு (100), தோனி (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here