எஸ்.வி. சேகரை மன்னிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

0
287

சென்னை: எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பதிவுக்கு வருத்தம் மட்டுமே தெரிவித்தாரே தவிர அதை மறுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்த சந்திப்பின்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு அவரது கன்னத்தை தட்டினார் ஆளுநர். இதற்கு அந்த பெண் நிருபர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஆளுநர் மன்னிப்பும் கேட்டார். எனினும் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட பெண் நிருபர் கன்னத்தை கிள்ளயதற்கு ஆளுநர் சொன்ன காரணத்தை ஏற்கவில்லை என்றார்.

இந்நிலையில் எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் பெண் நிருபர்களின் தரத்தை தாழ்த்தும் அளவுக்கு அவர்களை கடுமையாக அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். இந்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரது வீட்டை பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த பதிவை நீக்கினார் எஸ்வி சேகர். அவரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் தீவிரமானது. இதையடுத்து அவர் தலைமறைவாகவே இருந்து வருகிறார். அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமதிலகம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதற்கான காரணங்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில் குழந்தை செய்த தவறை மன்னிக்கலாம், ஆனால் முதிர்ச்சி அடைந்த நபரின் குற்றத்தை மன்னிக்க முடியாது. பணியில் இருக்கும் பெண்கள் குறித்து அந்த பதிவில் சொன்னதைவிட கடுமையாக சொல்ல முடியாது.

இதுபோன்ற கருத்துகளால் பெண்கள் பொது வாழ்க்கைகே வரமுடியாத சூழலை ஏற்படுத்தும். ஃபேஸ்புக் கருத்து பரிமாற்றம் பற்றி எஸ்.வி.சேகர் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார், கருத்துகளை மறுக்கவில்லை. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகளை சொல்ல யாருக்கும் உரிமையில்லை.

சமூக அமைதியை உருவாக்க வேண்டுமே தவிர வேற்றுமையையும் பதற்றமான நிலையையும் உருவாக்க கூடாது. தனி நபருக்கு எதிரான கருத்து அல்ல பெண் இனத்துக்கு எதிரானது. தனி நபர் மீதான புகார்களில் என்ன நடவடிக்கை எடுப்பீர்களோ அதை எடுக்க வேண்டும் என்றார் ராமதிலகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here