காவிரி வழக்கில் தமிழகம் பின்னடைவை சந்திக்க காரணம் என்ன?

0
311

டெல்லி: சமீப காலங்களில் காவிரி வழக்கில் தொடர்ச்சியாக தமிழகம் பின்னடைவை சந்தித்து வருகிறது. காவிரி நடுவர்மன்றம் இறுதி தீர்ப்புக்கு எதிராக தமிழக, கர்நாடக அரசுகள் தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அன்று முதலே, இந்த பின்னடைவுக்கு ஆரம்ப அத்தியாயம் எழுதப்பட்டது.

நடுவர்மன்றம் 2007ஆம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீர் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த தண்ணீரே போதாது என்றுதான் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால் தீர்ப்பில் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. அளவு தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. தமிழக பங்கு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. இந்த உத்தரவு 15 வருடங்கள் செல்லுபடியாகும் என்றும் கூறியது. தமிழக நீரின் அளவு குறைக்கப்பட்டது

மாநில அரசின் வாதத்திற்கு கிடைத்த பெரும் பின்னடைவு.  உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ஒரு திட்டத்தை அமைக்க 6 வாரம் கெடு விதித்திருந்தது.  6 வாரம் கெடு உருண்டோடியும், இன்னும் மத்திய அரசு திட்டத்தை சமர்பிக்கவில்லை. உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை கூட்டிக்கொண்டு உள்ளது. இன்றைய உத்தரவுப்படி வரும் 14ம் தேதி வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு மேலும் மத்திய அரசு கால அவகாசம் கேட்டால் என்ன நடக்குமோ அதுவும் தெரியாது. கால அவகாசம் காரணமாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின் சூடு ஆறிக்கொண்டுள்ளது.

முதலில் மேலாண்மை வாரியம் என்றார்கள், இப்போது திட்டம் என்கிறார்கள், அடுத்து என்னவோ? இதற்கெல்லாம் காரணம், தாமதம். குறைந்தபட்சம் இப்போதைக்கு 4 டிஎம்சி தண்ணீர் வழங்குங்கள் என கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டது. அதை கர்நாடகா செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட்டிலேயே அறிக்கை தாக்கல் செய்தது. இன்றைய விசாரணையில் அதற்கு உச்சநீதிமன்றம் பதில் சொல்லவில்லை. இது மற்றொரு பின்னடைவு.

15 வருடங்களுக்கு மேல்முறையீடே கிடையாது என ஸ்ட்ரிக்டாக கூறிய ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் மிகவும் கறாராக இருக்கும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், 6 வாரங்களுக்குள் திட்டத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டும், இதுவரை அதை செய்யாத மத்திய அரசுக்கு இன்னும் கோர்ட் குட்டு வைக்கவில்லை. இது தமிழகத்திற்கு பேரிடி. கடைமடை பகுதிக்குதான் நதிநீர் உரிமையில் அதிக பங்கு உள்ளது என்பதே உலக நியதி.

ஆனால், முதல் முறையாக கடைமடை பகுதியான தமிழகத்தின் கோரிக்கை காவிரியில் தொடர்ச்சியாக புறம்தள்ளப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான் நீதிமன்றங்களின் உத்தரவில் தமிழகத்திற்கு எதிரான அடிகள் தொடருகின்றன. தமிழக அரசின் வழக்கறிஞர் குழு தங்கள் வாதத்தை முன்வைப்பதில் சறுக்கி வருவதுதான் உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடுகளுக்கு காரணம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here