ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்த, இந்திய ரயில்வே முடிவு

0
211

புதுடில்லி: ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், தாமதத்தை தவிர்க்கவும், விபத்துக்களை குறைத்து பயணியரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும், ஐரோப்பிய முறையிலான ரயில் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில், பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை நம்பியே உள்ளனர். ரயில் பயணம், விரைவானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டாலும், சில நேரங்களில், விபத்துகள் நடக்கின்றன. ‘இதற்கு, ‘சிக்னலிங்’ எனப்படும், ரயில் போக்கு வரத்து கட்டுப்பாட்டு முறையில் உள்ள குறைபாடுகளே காரணம்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட, ரயில் கட்டுப்பாட்டு முறைகளையே, இன்றும் பின்பற்றி வருகிறோம். 2017 – 18ல், 73 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதை தவிர்க்க, பழைய ரயில் கட்டுப்பாட்டு முறையை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ரயில்வே ஆய்வுக் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், சிக்னலிங் முறையில், மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து, ரயில்வே அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு முறை – 2 என்ற தொழில் நுட்பத்தை, பயன்படுத்த, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்பம், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும்; ரயில் தாமதமாக செல்வது தவிர்க்கப்படும்; விபத்துக்களும் குறையும். ஒரே ரயில் தடத்தில், பல ரயில்களை விபத்தின்றி இயக்க, இந்த தொழில்நுட்பம் உதவும். ஒரு ரயிலையும், இன்னொரு ரயிலையும், 500 மீட்டர் இடைவெளியில், பாதுகாப்பாக இயக்கலாம். சிக்னல் முறைகளை மிக துல்லியமாக இயக்க முடியும்.

ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள, டில்லி – முகல்சராய் வழித் தடத்தில், இந்த ஐரோப்பிய முறையை சோதித்துப் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 830 கி.மீ., தொலைவுள்ள இந்த வழித்தடத்தில், அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்கு, இந்த நவீன போக்குவரத்து கட்டுப்பாட்டு முறையை சோதிப்பதன் மூலம், 50 சதவீதத் துக்கு மேலான, ரயில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம். மனிதர்கள் செய்யும் தவறுகளால் தான், பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. அதை, இனி முழுவதுமாக தவிர்க்க முடியும்.

இது, ஐரோப்பிய தயாரிப்பு என்பதால், விலையும் அதிகமில்லை. இந்த தொழில்நுட்பத்தை அமல்படுத்திய பின், இதற்கான உபகரணங்கள் தயாரிக்கும் ஐரோப்பிய நிறுவனங்களிடம், நம் நாட்டிலேயே தொழிற்சாலை அமைக்கும்படி கோரிக்கை வைக்கலாம். வருங்காலத்தில், இந்த நவீன உபகரணங்களை, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், நாமே தயாரிக்கவும் முயற்சி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். நாப்கின்!

ரயில் நிலையங்களின் அருகில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, கழிப்பறை வசதி இல்லாததால், ரயில் நிலைய சுற்றுப்புறத்தில், மலம், சிறுநீர் கழிப்பதை, வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், ரயில் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், ஆண் மற்றும் பெண்களுக்கான புதிய கழிப்பறைகளை கட்ட, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த கழிப்பறைகளை, பயணியர் மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களும், இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், சுகாதாரத்தை பேணுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரயில் நிலையங்களின் உள்ளே மற்றும் வெளியே, மலிவான விலையில் சானிடரி நாப்கின்களும், ஆணுறைகளும் விற்பனை செய்ய, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள, 8,500 ரயில் நிலையங்களில் இந்த வசதி உருவாக்கப்பட உள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here